தமிழகத்தில் செயல்படும் அரசு பஸ்களில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க, டிஜிட்டல் பயண அட்டை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 3,500 பேருந்துகளுடன் செயல்பட துவங்கி, தற்போது சுமார் 21 ஆயிரம் பேருந்துகளுடன், இந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகமாக இருந்து வருகிறது. இக்கழகத்தின் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் 2,400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் புதிதாக 702 பேருந்துகள் இணைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் செல்லாத இடமே இல்லை என்ற வகையில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேவை வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணமாக, கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சி ஆகியன மிகப் பெரும் மலர்ச்சி கண்டுள்ளது. இனிவரும் காலங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் 100 மற்றும் பிஎஸ்-6 பேருந்துகள் 521 என, மொத்தம் 621 புதிய பேருந்துகள் மதுரை மண்டலத்தில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக அடுத்தடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்த போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தொலை தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓடும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் பல லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். கடும் நிதி நெருக்கடியில் இயங்கினாலும், பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, தொலை தூர பயணங்களுக்கு ஏசி பேருந்துகள், படுக்கை வசதியுடன் ஸ்லீப்பர் பஸ்கள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகிறது. இத்துடன் தொலை தூர பேருந்துகள் தற்போது எங்கு பயணித்துக்கொண்டு இருக்கிறது என்பதை கண்டறிய டிராக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.
இதன்படி, அரசு நகர பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை நகர பஸ்களில் டிஜிட்டல் அட்டை தற்போது பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் 6ம் ேததி செயல்பாட்டிற்கு வந்த இந்த டிஜிட்டல் பயண அட்டை மூலம் அரசு பேருந்துகளில் மட்டுமின்றி மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கலாம் என, கூறியதால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து டிஜிட்டல் பயண அட்டை திட்டத்தை, மதுரை, திருச்சி, கோவை உட்பட மாநிலம் முழுவதும் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயணிகள் டிக்கெட் வாங்கும் போது சில்லறை பிரச்னை ஏற்படாது. இந்த டிஜிட்டல் பயண அட்டை என்பது என்எப்சி என்ற தொழில் நுட்பத்துடன் இயங்குகிறது. எனவே, இதனை அனைத்து இடங்களிலும் மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும். ஜிபே போன்றவை பயன்படுத்தும் போது ஏற்படும் டிஜிட்டல் பிரச்னைகள் இதில் பெரும்பாலும் ஏற்படாது. பேருந்துகளின் கண்டக்டர்கள் பயன்படுத்தி வரும் மின்னணு டிக்கெட் வழங்கும் கருவியில் டிஜிட்டல் பயண அட்டையை தொட்ட உடன் அதிலிருந்து பயணத்திற்கான கட்டண தொகை போக்குவரத்துக் கழகத்தின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். அந்த தகவல் வந்தவுடன் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும்.
டிஜிட்டல் பயண அட்டையை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளும் முன்பாகவே கணிசமான தொகை கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் பயண அட்டை விரைவில் நடைமுறைக்கு வரும். தற்போது இவற்றை பயன்படுத்தும் பயணிகளுக்குபிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது மேலும் நவீனப்படுத்தப்படும்’ என்றார்.
ரூ.100 முதல் ரீசார்ஜ்…
டிஜிட்டல் பயண அட்டையில் ரூ.100 முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. பொதுமக்கள் இந்த அட்டையின் கணக்கில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொண்டு, அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடி தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் டிஜிட்டல் பயண அட்டைகளுக்கும் ரீசார்ஜ் செய்ய வழிவகை செய்யப்படும். இவை பயன்பாட்டிற்கு வந்தால் அரசு பேருந்துகளில் ஏற்படும் சில்லறை பிரச்னைகள் முடிவுக்கு என்பதால் பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
The post தமிழகத்தில் இயங்கும் அரசு பஸ்களில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க வருகிறது டிஜிட்டல் பயண அட்டை: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.