சென்னை: தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுரங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர், பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலாகியது.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை மூட வேண்டும் என்று லாரி உரிமையாளர் சங்கம் வாகன உரிமையாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமல் appeared first on Dinakaran.