சென்னை: “தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு. தெலங்கானாவில் 20 முதல் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழகத்தில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழகத்தில் இல்லையா? அதற்கான நிதி தமிழகத்தில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானாவில் கடந்த 6-ம் தேதி தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதியைக் காப்பதில் அம்மாநில காங்கிரஸ் அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். டிசம்பர் 9-ம் தேதி அதன் அறிக்கை அம்மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.