சென்னை: தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று முன்தினம் வெளியிட்டார். இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், வணிக அமைப்புகளிடம் கடந்த 2 தினங்களாக கருத்துகளை கேட்டு வருகிறார். இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், சிறு, குறு தொழில்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களிடம் அவர் கருத்துகளை கேட்டறிந்தார்.