சென்னை: அரசுக்கு எதிராக பைட் பண்ணுங்கன்னு சீமானை அண்ணாமலை தூண்டிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் எதிர்ப்பை மூர்க்கமாக முன்னெடுத்து வருகிறார். அவருக்கு பாஜக முழு ஆதரவை தெரிவித்து வருகிறது. அதுமட்டுமல்ல, தமிழிசை சவுந்தரராஜன், ‘எங்கள் கருத்தியலை தற்போது சகோதரர் சீமான் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது பேச்சுகள் எங்களுக்கு பலம் சேர்க்கின்றன. பெரியாரை சீமான் கடுமையாக எதிர்ப்பது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. அவர் எங்கள் டீம் என்று சொல்வதைவிட எங்கள் கருப்பொருள் கூட்டாளி” என்றும் சொந்தம் கொண்டாடி பேசினார்.அதற்கு முன்பே `அண்ணன் சீமானுக்காக ஆதாரத்தை நான் தருகிறேன்’ என அண்ணாமலை ஆஜரானார்.
பாஜ ஆதரவு நிலைபாட்டை சீமான் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானின் பின்னனியில் பாஜக இருப்பதை பல சம்பவங்கள் உறுதி செய்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணம், அனைத்து கட்சிகளையும் கண்டபடி பேசும் சீமான், பாஜக தலைவர்களையோ, அக்கட்சியையோ எந்த விதத்திலும் விமர்ச்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதனால் நாம் தமிழர் கட்சி, பாஜகவினர் பி டீமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் விவாதப் பொருளாகி வருகிறது.
அதேநேரம், நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தரப்பில் விமர்சித்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள், `சீமான் எங்கள் டீம்’ என பாஜக சொல்லும்போது மறுத்து ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் மவுனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில், சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். சீமான் அமர்ந்திருந்த காருக்கு எதிரே வந்த அண்ணாமலை, அவரின் காரின் அருகே சென்றார்.
தொடர்ந்து காரின் கண்ணாடியை இறக்கிவிட சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை, ‘அண்ணா பைட் பண்ணிக்கிட்டே இருங்க.. விட்றாதீங்க.. ஸ்ட்ராங்கா இருங்க’ என கூறிவிட்டுச் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜகவின் பி டீமாக சீமான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்வது போன்று சீமான்- அண்ணாமலையின் சந்திப்பு அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அண்ணாமலை கூறிய வார்த்தையை கேட்டு காரில் அமர்ந்திருந்த சீமான் தனது விரலை உயர்த்தியது, அதை ஆமோதித்து உறுதி செய்வதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சீமான்- அண்ணாமலையின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழக அரசுக்கு எதிராக பைட் பண்ணுங்கன்னு சீமானை தூண்டி விட்ட அண்ணாமலை: பாஜவின் பி டீம் என்று உறுதியானது.! அரசியல் நோக்கர்கள் கருத்து appeared first on Dinakaran.