புதுடெல்லி: ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் நீங்களே சுமுக தீர்வு காணாவிட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.