சென்னை: தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான இரண்டு சட்டமுன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் துறைக்காக இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்காக நிதியை உயர்த்தி இருக்கிறோம் என்றும் அறிவிப்பில் அவர் குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து பேசியதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என்று ‘குரலற்றவர்களின் குரலாக’ திராவிட மாடல் ஆட்சி இருக்க வேண்டுமென்றுதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அடித்தளமாக அமைய வேண்டுமென்று நினைக்கின்றேன். அந்த வகையில், இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்திருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற திராவிட மாடல் அரசு, இன்றைக்கு நாம் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்த போகிறோம். கலைஞர்தான் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லை முதன்முதலாக பரிவோடு உருவாக்கினார். அதே அக்கறையோடுதான் நானும் அந்த துறையை கவனித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல; உரிமை அடிப்படையில் நாம் திட்டங்களை தீட்டி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திக் கொண்டு வருகிறது. அரசு உயர் பதவிகளில் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை வழங்கிக் கொண்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தை, அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலகச் சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிட்டிருக்கிறோம். அரசு பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசு பணியை பெற்றுள்ளனர்.
இதேபோல, மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்துவதை தனியார் துறைகளில் ஊக்குவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன கருவிகள் வழங்கும் திட்டம் ரூ.125 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் கடலுக்கு அருகில் சென்று கடலை கண்டு ரசிக்க சிறப்பு மரப்பாதையை உருவாக்கி இருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியுடன் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இப்போது அந்த சட்டமுன்வடிவுகளை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் வழங்கும் சட்டமுன்வடிவுகளை இதே மாமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பெருமையை நான் அடைந்தேன். 2009ம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர், எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அன்றைக்கு இருந்த அதே மனநிறைவோடு நான் இன்றைக்கு உங்கள் முன்பு நிற்கிறேன். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாக பெறுவதற்கு இந்த சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமோர் முன்னெடுப்பு. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இந்த அவைக்கு வழங்குகிறேன்.
இந்த சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாக திகழ்வார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும், அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மாற்றுவதும்தான் திராவிட இயக்கத்தினுடைய நோக்கம். அந்த அடிப்படையை கொண்டதுதான் இந்த சட்டம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு சட்டமுன்வடிவுகளை இங்கே அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இந்த சட்டத் திருத்தத்தினால் விளையப் போகும் பலன் பற்றி ஒரு விவரத்தை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.
ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர், 2025ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 2025ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிமுகம் செய்தார்.
அந்த 2 சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர், உள்ளாட்சி அமைப்பு முறையில் மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் ஒலிப்பதை உறுதி செய்யும் வகையிலும், உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைமை பொறுப்புகளை வகிக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேற்காணும், அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும், வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் சமூக நீதியை அடைவதற்கு வழிவகுத்துள்ளது.
அதற்கிணங்கியவாறு, 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 9/1999) தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளி நபர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது. அதேபோல, 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 21/1994) தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம், அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை நியமனம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது. இந்த சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அந்த சட்டமுன்வடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலராக நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு சட்டமுன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தார் appeared first on Dinakaran.