தருமபுரி: திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என பரவும் தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.