சென்னை: “மத்திய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர். மத்திய பாஜக அரசின் இந்த செயல் தமிழகத்தின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமையையும் கிடையாது’ எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது.