சென்னை: தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாட்டு கோமியத்தில் மருத்துவக்குணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அலோபதி மருத்துவரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
அதில், ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், ‘அமிர்த நீர்’ என சொல்லப்பட்டிருக்கிறது. மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனால் கோமியம் குடிக்க மாட்டீங்களா?” என்று மருத்துவரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சர்ச்சையாக பேசினார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால் தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.