சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பி இரா.கிரிராஜன் எம்பி பேசுகையில், தமிழ்நாட்டில் டிரோன் தொழில்நுட்ப படிப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்னென்ன? இதுதொடர்பாக தமிழகத்தில் வணிக ஆய்வு, ஆவணப்படுத்தல், கண்காணிப்பு, தயாரிப்பு விநியோக நோக்கங்களுக்காக டிரோன்களை பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் பேசுகையில், தமிழகத்தில் டிரோன்களின் பயன்பாடுக்கான சாத்தியக்கூறுகள் ஒன்றிய அரசு சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர பொழுதுபோக்கு, விவசாயம், பூச்சி கட்டுப்பாடு, கூட்டத்தை கண்காணிப்பது, மேப்பிங், சுரங்க ஆய்வு, கண்காணிப்பு, தேடல், மீட்பு, சரக்கு விநியோகம் போன்றவற்றில் டிரோன்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன என்றார்.
மேலும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் டிரோன் தொழில்நுட்பத்தை பயிற்றுவிப்பதற்கான கல்வி நிறுவனங்களை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா? எதிர்காலத்தில் டிரோன் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, ரிமோட் பைலட் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கான அங்கீகாரத்தை டிரோன் விதிகள் 2021ன்படி, ரிமோட் பைலட் பயிற்சி அமைப்புகளுக்கு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் சான்றிதழ் வழங்குவதாகவும், அதன்கீழ் எந்தவொரு தனிநபரோ, தனியாரோ அல்லது அரசு நிறுவனங்களோ விண்ணப்பித்து ஒப்புதல் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள 164 அங்கீகரிக்கப்பட்ட ஆர்.பி.டி.ஓ.க்களில், அண்ணா பல்கலைகழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் உள்ளிட்ட 12 ஆர்.பி.டி.ஓ.க்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை 164 மையங்கள் மூலம் 23,410 ரிமோட் பைலட் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிகளில் வெளிநாட்டு ஒத்துழைப்பும் ஏதும் இல்லை என்று இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு டிரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை என்ன?: நாடாளுமன்றத்தில் இரா.கிரிராஜன் எம்பி கேள்வி appeared first on Dinakaran.