சென்னை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நேற்று மாலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு தலைமை வகித்தார்.
இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என பலரும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், அண்ணாதுரை, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், இமையா கக்கன், மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், டி.செல்வம், அருள் பெத்தையா, துரை சந்திரசேகர், விஜயன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர்கள் பற்றி இழிவாகப் பேசிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். எப்போதெல்லாம் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் பேரியக்கம் அவர் செல்கின்ற இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டும்.
ஒரே ஒரு கேள்வி தான் நாங்கள் கேட்கிறோம் இவ்வளவு நடந்த பிறகும் தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பாஜக இது பற்றி எதுவும் கேட்கவில்லை. தமிழ் இனத்தை கொச்சைப்படுத்திய ஒன்றிய அமைச்சரை அண்ணாமலை ஏன் கண்டிக்கவில்லை. அப்படி என்றால் தமிழக மக்கள் எல்லாம் நாகரிகமற்றவர்கள் என அண்ணாமலையும் பாஜ தலைவர்களும் கூறுகிறார்களா? தமிழ்நாடு மக்களிடம் இவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள். எதை நியாயப்படுத்தப் போகிறார்கள். இதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தின் கேள்வி. இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.