சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது.
பொறுப்பான மூத்த தலைவர்கள், ஏனைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்தது போய், நாடாளுமன்ற விவாதத்தில் அனுபவசாலிகளான தலைவர்களே தரக் குறைவாகவும், முகம் சுளிக்கும் விதத்திலும் கருத்துகளைத் தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சரத் யாதவ் பெண்களைப் பற்றி, குறிப்பாக, தென்னிந்தியப் பெண்களைப் பற்றி தெரிவித்திருக்கும் அனாவசியமான கருத்து.
காப்பீட்டு மசோதா பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பெண்கள் பற்றிய சர்ச்சையில் சரத் யாதவ் இறங்கியது ஏன் என்று அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். “உங்கள் இந்துக் கடவுளர்கள், தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைப்போல கருப்பானவர்கள். ஆனால், உங்களது திருமண விளம்பரங்கள் ஏன் வெள்ளை சருமமுள்ள பெண்கள்தான் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன?’ என்கிற கேள்வியுடன் மாநிலங்களவையை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சரத் யாதவ். அத்துடன் நின்று கொண்டிருந்தால்கூடப் பரவாயில்லை.
“தென்னிந்தியப் பெண்கள் கருப்பாக இருந்தாலும், அவர்களுடைய உடல்கட்டைப் போலவே அவர்கள் அழகானவர்களும்கூட. அதுபோன்ற உடல் வனப்பை நாம் வட மாநிலங்களில் பார்க்க முடிவதில்லை. அவர்கள் நன்றாக நடனமாடவும் தெரிந்தவர்கள்’ என்று இந்தியில் தென்னிந்தியப் பெண்களை நக்கலும் கேலியுமாக சரத் யாதவ் எள்ளி நகையாடியபோது, அதைக் கேட்டுக் கொதித்து எழுவதற்கு பதிலாக, மாநிலங்களையில் இருந்த பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் பலமாக நகைத்துச் சிரித்திருக்கிறார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த பலரும் அதைக் கேட்டு ரசித்திருக்கிறார்கள் அல்லது மெளனம் சாதித்திருக்கிறார்கள். சரத் யாதவின் கிண்டலையும் கேலியையும் பார்த்துக் கோபாவேசமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒரே தென்னிந்திய உறுப்பினர் கனிமொழி மட்டுமே. அவரது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பார்த்து அவை அவருக்கு ஆதரவாகக் கொதித்தெழுந்ததா என்றால் இல்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல் படேலும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஓபிரைனும் கனிமொழியைச் சமாதானப்படுத்த முற்பட்டார்களே தவிர, சரத் யாதவைக் கண்டிக்கத் துணியவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தேசியவாத காங்கிரஸ் தலைவர் டி.பி. திருபாதி “அழகான பெண்ணின் அடையாளம் மெலிந்த உடற்கட்டும், மாநிறமும்தான் என்று காளிதாசனே வர்ணித்திருக்கிறார்’ என்று சரத் யாதவுக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவிக்க, அவை மீண்டும் ஒருமுறை குலுங்கிச் சிரித்திருக்கிறது.
“அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்? கருப்பு நிறத்திலான பெண்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள், உலகில் மிக அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்காகத்தான் எங்கள் தலைவர் ராம் மனோகர் லோகியாவும் மற்றவர்களும் போராடினார்கள் என்று நான் விவாதிக்கத் தயார். லோகியாவும் காந்தியும்கூட பெண்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்’ என்று தனது கூற்றை நியாயப்படுத்தத் தொடங்கி இருக்கிறார் சரத் யாதவ்.
“இலக்கியத்தை மேற்கோள் காட்டி பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை வலியுறுத்த முற்படாதீர்கள். மறைந்த தலைவர்களை இந்தச் சர்ச்சையில் இழுக்காதீர்கள். பெண்களை, குறிப்பாக, தென்னிந்தியப் பெண்களைப் பற்றி இப்படி இழிவாக இந்த அவையில் கருத்துத் தெரிவிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்கிற தமிழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் குரல், அவர் பெண் உறுப்பினர் என்பதாலும், ஏனைய தென்னிந்திய உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பாததாலும் எடுபடாததில் வியப்பொன்றும் இல்லை.
கனிமொழி மட்டுமல்ல, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சரத் யாதவால் அவமானப்படுத்தப்பட்டது அதைவிடக் கொடுமையான ஒன்று.
“நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர். பெண்களின் நிறம் பற்றி இதுபோலத் தரக்குறைவான கருத்துக்களை அவையில் வெளிப்படுத்தாதீர்கள். அது தவறான வழிகாட்டுதலாகிவிடும்’ என்று கூறிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, 2012-ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்ற மூத்த அரசியல் தலைவர் கூறிய பதில்- “உங்கள் பின்னணி என்ன என்று எனக்குத் தெரியும்!’
இந்த அளவுக்கு ஒரு மூத்த அரசியல் தலைவர் தரக்குறைவாகப் பேசலாமா? அதை அவையில் உள்ளவர்கள் அனுமதிக்கலாகுமா? அவர் சார்ந்த கட்சியும், இந்தியாவில் உள்ள ஏனைய அரசியல் இயக்கங்களும் இதை அசட்டையாக விட்டுவிடுதல் நியாயமா?
தென்னகப் பெண்களைப் பற்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் பற்றி, நாடாளுமன்றத்தில் சரத் யாதவ் தரக்குறைவாகப் பேசியிருப்பதுகூடத் தெரியாமல், அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறோமே, நாமெல்லாம் தமிழர்கள் என்று பெருமை பேசி வாழ்ந்தென்ன பயன்? எதிர்ப்புத் தெரிவிக்க கனிமொழியைத் தவிரத் தமிழகத்திலிருந்து நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினர்கள் ஒருவருக்குக்கூடத் தோன்றவில்லையே, நமது சுயமரியாதை உணர்வு மரத்துப் போய்விட்டதா என்ன?
By ஆசிரியர் – தினமணி