சென்னை: “ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்தச் செயலை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு, அந்த இலச்சினையை மாற்றியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கே ஏற்படுத்திய அவமானமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் லோகோ வெளியிட்டுள்ளார். ரூபாய் குறியீடு பயன்பாட்டுக்கு வந்த பிறகு அதுவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'ரூ' என மாற்றப்பட்டுள்ளது.