திமுகவின் பக்கம் பாமக வந்து, அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடக்கூடும் என்பது ஒரு வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: அதிமுக – பாஜக கூட்டணியை திமுக கூட்டணி ஏற்கெனவே 2 முறை தோற்கடித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்ததுபோல தெரிந்தாலும், கள்ளக் கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் சமீபகால நிகழ்வுகள் இருந்தன. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்கள்.