களக்காடு: திருக்குறுங்குடி. வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் அனுமன் மந்திகள் நம்பி கோயில் ரோட்டில் குதூகலமாக உலா வருகின்றன. களக்காடு புலிகள் காப்பக வனச் சரகம் திருக்குறுங்குடி மலையில் புலி, யானை, கரடி, கழுதைப் புலி, சிறுத்தை. கடமான் வரையாடு, கருஞ்சிறுத்தை, ராஜ நாகம், செந்நாய், காட்டு மாடு, மர அனில், சிங்கவால் குரங்கு, அனுமன் குரங்கு, நாட்டு குரங்கு மற்றும் ஏராளமான பறவைகள் 40க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், மூலிகை தாவரங்கள் இங்குள்ள வனப்பகுதியில் உள்ளது.
இந்நிலையில் திருக்குறுங்குடி வனப் பகுதியில் கடந்த 5 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது நல்ல சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதையடுத்து வனப்பகுதியில் உள் வனப் பகுதியில் வாழும் அனுமன் குரங்குகள் தற்போது கூட்டமாக கீழே வந்துள்ளது. அதில் குட்டிகளும் உள்ளது. தற்போது நம்பி கோயில் வனத்துறை செக்போஸ்ட் அருகிலும், நம்பி கோயிலுக்கு செல்லும் ரோட்டிலும் அவைகள் உலா வருகின்றன. ரோட்டையொட்டியுள்ளமரங்களிலும், மரக்கிளைகளிலும் அவைகள் தஞ்சமடைந்துள்ளன.
இதனிடையே கோயிலுக்கு வருகிற பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனுமன் மந்திகளின் அருகில் சென்று செல்போனில் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது என ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் மந்திகள் தாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி இதனை தவிர்க்க வேண்டும். மேலும் செயற்கை உணவுகளை மந்திகள் மற்றும் குரங்குகளுக்கு கொடுப்பதையும் பக்தர்களும், சுற்றுலா வருபவர்களும் தவிர்க்க வேண்டுமென திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post திருக்குறுங்குடி நம்பி கோயில் மலையில் குட்டியுடன் உலா வரும் அனுமன் மந்திகள்: செல்பி எடுப்பதை தவிர்க்க வனத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.