திருச்சி: திருச்சி காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் திங்கள்கிழமை மதியம் அரையாண்டு கடைசித் தேர்வு முடிந்ததுவிட்டு, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர். படித்துறையில் குறைந்தளவு நீர் சென்றதால், அவர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர். அப்போது தெர்மகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் விளையாடினர். நீரின் வேகம் அதிகரித்ததால், 2 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மற்றொரு மாணவன் முயற்சித்தார். அவரும் நீரில் சிக்கிக் கொண்டார்.