திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் வேளையில் கிழக்குப் பகுதியில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் கடலில் நீராடுவது புனித நீராடல் என்றழைக்கப்படுகிறது.
வங்கக்கடலோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயில் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி) கடல் பொறியியல் துறை வல்லுநர்கள் வழிகாட்டுதலில் கருங்கற்களை கொண்டு நிரப்பி நெகிழி காப்புடன் கூடிய கம்பியிலான பெட்டிகள் (கேபியன் பாக்ஸ்) என்ற நவீன தொழில்நுட்பத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த பிப்.17ல் காணொலி மூலம் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
கோயிலில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தொடங்கி வடக்கு பகுதி கடற்கரை வரையில் ரூ.19 கோடியே 80 லட்சம் மதிப்பில் 496 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்தில் 200 மி.மீ. அளவுக்கு குறையாத கருங்கற்கள் மேல் இடைவெளி இல்லாமல் நிரப்பி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மீன்வளத் துறையினரால் இந்தப் பணி தற்போது வள்ளிக்குகை பகுதியில் இருந்து கடற்கரை வாசல் வரை இரவு, பகலாக வேகமாக நடந்து வருகிறது. இதேபோல் அய்யா கோயிலை தாண்டி கடற்கரையில் தூண்டில் வளைவு பாலத்திற்காக கடலில் கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இருபக்கம் கற்கள் கொட்டப்படுவதால் நடுவில் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்செந்தூர் கோயில் முன்பு கடற்கரையில் இறங்கியவுடன் பக்தர்கள் குளிக்க தொடங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆழமாகவும், பெரிய பள்ளமாகவும் உள்ளது. மேலும் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாகி சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து கடல் அரிப்பினை தடுத்து நிறுத்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஐஐடி நிர்வாகத்தினருடன் ஆலோசித்து, மீன்வளத்துறையினர் முறையாக ஆய்வு செய்து திருச்செந்தூர் கோயிலைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதியிலும், பக்தர்கள் நீராடும் கடல் பகுதியிலும் தகுந்த பாதுகாப்பு வசதியை செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
The post திருச்செந்தூரில் கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.