திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இன்று காலை ஆந்திர மாநிலம், கடப்பா செல்லும் பயணிகள் ரயிலில் திடீரென பிரேக்கில் பழுதாகி நின்றது. இதனால் அம்மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் ஆந்திர மாநிலம், கடப்பாவுக்கு செல்லும் ரயில் புறப்பட்டது.
இதில் 7 பெட்டிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரயில் காலை 7.30 மணியளவில் திருத்தணி ரயில்நிலைய நடைமேடை 1ல் வந்து நின்றது. பின்னர் அங்கிருந்து கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டபோது, அதன் பிரேக்கில் பழுது ஏற்பட்டு கரும்புகை எழுந்தது. இதைத் தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டார். ரயிலிலிருந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளும் பழுதுபார்ப்பு ஊழியர்களும் விரைந்து வந்தனர். பின்னர் அந்த ரயிலின் பிரேக்கில் ஏற்பட்டிருந்த பழுதுகளை நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அம்மார்க்கத்தில் பிற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதில் கடப்பா ரயிலில் பிரேக் பழுது ஏற்பட்டிருப்பதை இன்ஜின் டிரைவர் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்ததால், அந்த ரயிலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
The post திருத்தணி ரயில்நிலையத்தில் கடப்பா செல்லும் ரயிலில் பிரேக் பழுது: ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.