மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை முதல் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட அன்றாடம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். மேலும், கட்டிடக்கலையின் உன்னத சிற்பங்கள் அடங்கிய மீனாட்சி அம்மன் கோயிலை உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டுள்ளது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று(மார்ச் 18) மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கின்றனர். இதையொட்டி இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும். ஆயினும் ஆடி வீதி மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.