திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் யாரும் மாவட்டத்துக்குள் வராத வகையில் கூடுதல் பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.