*நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்போரூர் : திருப்போரூர் பகுதிகளில் கண்டு கொள்ளாத அதிகாரிகளால், மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசு அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், திரையரங்கங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, இயற்கை தயாரிப்புகள் விற்பனை அதிகரித்தது. பல இடங்களில் பாக்கு மட்டைத் தட்டுகள், பேப்பர் கப்புகள், மந்தாரை இலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு பொதுமக்களின் மனதிலும் ஒருவித மாற்றத்தை உருவாக்கியது.
இந்நிலையில், இவற்றை கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவாலும், தொடர்ச்சியான தேர்தல் பணி காரணமாகவும் அதிகாரிகளின் சோதனைகள், அபராதம் விதித்தல் போன்றவை குறைந்துவிட்டது.இதனால், தற்போது மீண்டும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடங்கி உள்ளது. நாவலூர், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், கோவளம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் சிறு உணவகங்களில் சாம்பார், சட்னி, வடைகறி போன்றவை பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும், அங்கேயே சாப்பிடும் வகையில் விற்கப்படும் பஜ்ஜி, போண்டா, சமோசா போன்ற பொருட்களும் பிளாஸ்டிக் துண்டுகளில் வைத்து விநியோகிக்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள் போன்றவை பிளாஸ்டிக் கேரி பேக்கில் வைத்து விற்கப்படுகிறது. தொடக்கத்தில் இலை மறை காய்மறையாக விற்பனை செய்து வந்த கடைக்காரர்கள், தற்போது அதிகாரிகளின் கண்டுகொள்ளாத போக்கால் வெளிப்படையாக பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்காக வெளியில் தொங்க விட்டுள்ளனர்.
இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைகாட்ட தொடங்கி உள்ளது. ஆனால், சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளை கடைக்காரர்கள் கொடுக்கும்போது சமூக ஆர்வலர்கள் அவற்றின் தீமைகளை கூறி அரசு தடை செய்திருக்கும்போது, நாம் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என கூறுகின்றனர்.
ஆகவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகமும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் பிளாஸ்டிக் தடையின் அவசியத்தை உணர்ந்து அவை மீண்டும் தலையெடுக்காத வண்ணம் திடீர் சோதனைகளை மேற்கொண்டு, தடையை அமல்படுத்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்போரூர் பகுதிகளில் கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தலை தூக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு appeared first on Dinakaran.