திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் 7.25 மணிக்குள், கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறும். அப்போது, அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை முடிந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி நடைபெறும். மேலும், இரவு உற்சவத்தில் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வருகிறார். தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதி உலா மாட வீதியில் நடைபெறும். விழாவின் 6ம் நாளான வரும் 9ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான 10ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.
முக்கிய விழாவான மகாதீப பெருவிழா, வரும் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி (பருத்தி துணி) பயன்படுத்தப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.33.75 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்: 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் appeared first on Dinakaran.