திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று (டிச.2) தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் திருவண்ணாமலையில் நேற்று (டிச.1) மிக கடுமையாக இருந்தது. மழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும் கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. மேலும், திருவண்ணாமலை வ.உ.சி., 11-வது தெருவில் மலையடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. மேலும் வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளது.