திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவரும், அருட்தந்தையுமான சொ.ஜோ.அருண் சே.ச தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத், கலெக்டர் த.பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாச பெருமாள், ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, ஆணைய தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் இதுவரை 16 மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் பெற்ற 489 கோரிக்கை மனுக்கள் மீது 302 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டுள்ளோம். மேலும் 192 மனுக்கள் மீது பரிசீலனை செய்து அந்த மனுக்கள் மீதும் விரைவில் தீர்வு காணப்படும். பல காலங்களாக சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறுபான்மையினர் நிரந்தர அந்தஸ்து கிடைக்காமல் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனடியாக குழு அமைத்து அண்மையில் 159 பள்ளி, கல்லூரிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
தற்போது பல்வேறு கோரிக்கைகளை இக்கூட்டத்திலேயே நிவர்த்தி செய்து தீர்வு கண்டுள்ளோம். அடுத்து வரும் காலங்களில் மீதமுள்ள மாவட்டங்களுக்குச் சென்று மனுக்கள் பெற்று அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளோம் என்றார். பின்னர் 55 பயனாளிகளுக்கு ரூ7.53 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆணையத் தலைவர் வழங்கினார். இதில் சிறுபான்மையினர் நல இயக்க துணை இயக்குனர் தஷர்மிளி, ஆணைய உறுப்பினர்கள் ஸ்வர்ணராஜ், நாகூர் நஜிமுதீன், பிரவீன் குமார், தராஜேந்திர பிரசாத், ரமீட் கபூர், ஈக்காடு முகமது ரபி, வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் நல மக்கள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்: ஆணையத் தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.