புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். படத்தை பார்வையிட வருகை தந்த பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் மோடி இப்படத்தைப் பார்த்தார்.
கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை தீரஜ் சர்ணா இயக்கியுள்ளார். விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.