அங்காரா: துருக்கியில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் 66 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்தனர். வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் மலை உச்சியில் கர்தல்காயா ரிசார்ட் என்ற மரக்கூரைகளால் செய்யப்பட்ட 12 மாடிகளை கொண்ட ஓட்டல் மற்றும் விடுதி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இந்த ஓட்டலில் 234க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர். நேற்று அதிகாலை இந்த ஓட்டலின் உணவு தயாரிக்கும் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதனால் பீதியடைந்த சுற்றுலா பயணிகள் அறைகளில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு குழுவினர் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு கொளுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் 66 பேர் பலியாகினர். அவர்களில் இரண்டு பேர் அறையில் இருந்து கீழே குதித்தபோது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த 51 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 66 சுற்றுலா பயணிகள் பலி: 51 பேர் காயம் appeared first on Dinakaran.