துருக்கி என்பதை ஆங்கிலத்தில் ‘டர்க்கி’ என்று உச்சரிப்பார்கள். அந்த வார்த்தையின் மற்றொரு பொருள் வான்கோழி. துருக்கியைப் பற்றிப் பள்ளிப் பாடங்களில் ஐரோப்பாவின் நுழைவாயில் என்று கூறுவார்கள். முதல் உலகப் போரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் வென்றெடுக்கப்பட்டிருந்த ஆட்டமென் பேரரசு, துருக்கி தேசிய இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தால் 1923இல் ‘துருக்கி குடியரசு’ ஆனது. அநேகமாக ஐரோப்பாவின் ஒரு பகுதி அதன் கட்டுப்பாட்டில் இருந்தது.
துருக்கி ஆசிய நாடா, ஐரோப்பிய நாடா என்கிற விவாதங்கள்கூட உண்டு. ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டபோது, அதன் உறுப்பினராகச் சேர துருக்கி விருப்பம் தெரிவித்தும், இதர உறுப்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியர்களுக்கு ஒவ்வாத நாடாகவும், ஆசிய நாடுகளுக்கு இனம் புரியாத நாடாகவும் துருக்கி விளங்குகிறது.