*கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி : திருச்செந்தூர் உள்பட பல்வேறு கடற்கரைகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க மீன்வள பொறியியல் துறையினர் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர்கள் தூத்துக்குடி பிரபு, கோவில்பட்டி மகாலெட்சுமி, மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர்கள் விஜயராகவன், புஷ்ராஷப்னம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெரியதாழை மீனவர்கள் பேசுகையில், தங்கள் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தை மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை தவறாமல் நடத்த வேண்டும். புயல், மழை காரணமாக கடந்த மாதம் மீனவர்கள் பல நாட்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
எனவே மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடலில் மீனவர்கள் ஆபத்தில் சிக்கினால் அவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். திருச்செந்தூர் நகராட்சி கழிவுநீர் ஜீவாநகர் கடற்கரையில் கலப்பதை தடுக்க வேண்டும், என்றனர்.
மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பேசும்போது, கடலுக்கு சென்ற தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த 2 மீனவர்களை கடந்த 1ம் தேதி முதல் காணவில்லை. இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீனவர்களை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களாக திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், பெரியதாழை மற்றும் வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ கிராமங்கள் கடலுக்கு உள்ளே செல்லும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குகுளி தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசும்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்களை, அறிவுரைகளை மீனவர்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் சில கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயில் கடற்கரையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மீன்வள பொறியியல் துறையினர் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தியபோது இது தொடர்பாகவும் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். கடல் அரிப்பு தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கீடு வேண்டி அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்படும். நிதி ஒதுக்கீடு வந்ததும் கடல் அரிப்பை தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடல் மிகப்பெரிய சொத்து. அதனை நல்ல படியாக பயன்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கடல் வளத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். நமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது, கடல் வளமும் பாதிக்கப்படக்கூடாது. அந்த வகையில் சமச்சீராக பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு மீன்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த தரத்துக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
உயிர் பாதுகாப்பு மிக முக்கியம். எனவே, மீனவர்கள் உயிர்காக்கும் உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். உயிர் காக்கும் உடை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை மீனவர்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் 25 சதவீதம் உங்களிடம் இருந்து பெறப்படுகிறது.
பெரியதாழை, புன்னக்காயல் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இனிகோ நகர் மீனவர்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் குறைதீர் நாள் கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. வரும் நாட்களில் தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் 14 பேர் குடும்பங்களுக்கு தினப்படி உதவித் தொகையாக ரூ.4,21,400க்கான காசோலைகளை கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.
இலவசமாக கவச உடை
மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது உயிர்காக்கும் கவச உடை கண்டிப்பாக அணிய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மானிய விலையில் இந்த கவச உடை வழங்கப்படுகிறது. அனைத்து மீனவர்களாலும் இதனை வாங்க முடியாது.
எனவே, முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும். கடம்பா குளத்தில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டும். தருவைகுளத்தில் கடல் சீற்றத்தால் படகுகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. எனவே, தருவைகுளத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடல் அரிப்பு தடுக்க மீன்வள பொறியியல் துறை ஆய்வு appeared first on Dinakaran.