நாகர்னூல்: தெலங்கானாவின் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 72 மணிநேரமாக நீண்டுவரும் நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்களை தொடர்பு கொள்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன.
தெலங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளின்படி, எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் நாகர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கூறுகையில், “சுரங்கத்துக்குள்ளே சிக்கியிருப்பவகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம்.