சென்னை: தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம்: “ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.