* தேசிய புலனாய்வு அமைப்பு பதில் அளிக்க உத்தரவு
சென்னை: தொழில் முதலீடு என்று கூறி பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி ெசய்த நபர் மீது விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அளவிலான தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி சென்னை செங்குன்றத்தை பகுதியை சேர்ந்தவர், பலரிடம் பணம் பெற்று தேச விரோத செயல்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் திரட்டும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக சாந்தி குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், சர்வதேச அளவில் தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தன்னிடமும் பணம் பெற்று, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத செயல்களுக்காக பணம் அளித்துள்ளார். இது தொடர்பாக செங்குன்றம் காவல்நிலையம், தேசிய புலனாய்வு முகமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தனது புகார் மீது விசாரணை நடத்தி, தேசிய புலானாய்வு குழு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, தேசிய புலனாய்வு முகமை, செங்குன்றம் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.