சென்னை: நடிகர் ரவி – ஆர்த்தி இடையே சமரசப் பேச்சு முடிந்த பிறகு விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை சமரச பேச்சுவார்த்தைக்காக நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் 3 முறைக்கு மேல் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர். அப்போது ரவி, ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்தபின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
The post நடிகர் ரவி – ஆர்த்தி வழக்கு.. மத்தியஸ்தருக்கு அழைப்பு; சமரச பேச்சுக்குப் பின் விசாரணை: சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.