சென்னை: நம் வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பே அடித்தளமாக திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அந்த வகையில், தேனி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கினை (Multipurpose Indoor Stadium) சென்னை நேரு விளையாட்டு அரங்கிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தோம். Volley Ball, Basket Ball, Table Tennis, Shuttle Cock, போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்ட இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 600 பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டிகளை காண முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், “தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் – Tamil Nadu Centre for Sports Science அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் கடந்த 2023-2024ஆம் ஆண்டு அறிவித்தோம். அந்த அறிவிப்பின் அடிப்படையில், ரூ.3 கோடி செலவில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை இன்று திறந்து வைத்தோம்.
பயிற்சிக்காகவும், விளையாட்டின் போது ஏற்படும் காயங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆற்றுவதற்கும் தேவையான நவீன உபகரணங்கள் இந்த மையத்தில் இடம்பெற்றுள்ளன. Tamil Nadu Centre for Sports Science-ஐ பயன்படுத்தி உடல் அளவிலும், மனதளவிலும் நம் வீரர்கள் வலிமை பெற வாழ்த்தி மகிழ்கிறோம்!. மேலும், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள Mini Stadium-ல் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பளு தூக்கும் பயிற்சி மையத்தையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தோம். இந்த புதிய வசதிகள், தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும் சாதனைக்கும் நிச்சயம் துணை நிற்கும். என் வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்தார்.
The post நம் வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பே அடித்தளமாக திகழ்கிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.