திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தாலுகா, நயப்பாக்கம் கிராமத்தில் 2 பெண்களை குரங்குகள் கடித்து குதறியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, அரியப்பாக்கம் ஊராட்சி, நயப்பாக்கம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. போக்குவரத்து சரியாக இல்லாத நிலையில் அங்குள்ள சாலையை கடக்கும்போது குரங்குகளின் தொல்லையால் பெண்கள், மாணவ-மாணவிகள் தனியாக போக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் இருக்கும்போதும் கதவை சாத்திக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டியுள்ளது. கொஞ்சம் அசந்தால் வீட்டில் உள்ள பொருட்களை குரங்குகள் எடுத்துச் சென்று விடுகின்றன. இதில் நயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்களை நேற்றுமுன்தினம் குரங்குகள் கை மற்றும் தலை பகுதியில் கடித்துக் குதறியுள்ளன. அவர்கள் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
The post நயப்பாக்கம் கிராமத்தில் 2 பெண்களை கடித்து குதறிய குரங்குகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.