சென்னை: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ: உலகெங்கிலும் வாழ்கிற கோடான கோடி கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகப்பெரும் துக்கத்தைத் தருகிறது. 12 ஆண்டுகள் வாட்டிகன் திருச்சபைக்குத் தலைவராக இருந்த போப்பரசர், உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்றும், சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருள்மொழி வழங்கிய போப்பரசரின் மறைவு அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று ஈஸ்டர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மக்களுக்கெல்லாம் அருள்மொழி தந்து ஆசி வழங்கிவிட்டு இன்று திருச்சபையின் இல்லத்திலேயே மறைந்துவிட்டார்.