நெல்லை: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 -ஆம் ஆண்டு நாங்குநேரியில் 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது சகோதரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இவர் தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் துறையில் படித்து வருகிறார். நேற்று (ஏப்.16) மாலை தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இனம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இஅடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார். சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்: நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.