சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், ''மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகாண்ட், வட கிழக்கு போன்ற மாநிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்பதை உணர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், மக்கள் நலனுக்காக கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற கட்சிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.