சேலம்: நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும், என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்எல்ஏ-க்கள் சித்ரா, மணி, ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் சிவபதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி உள்பட அதிமுக-வினர் பலர் கலந்து கொண்டனர். ரத்த தான முகாமை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த ரத்த தானம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவர். அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை’’ என்றார்.