பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' உள்ளது. இதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த வருடம் டிசம்பர் 17-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, இளைஞர்களின் ஆதரவைப் பெற பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக, மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியை உத்தர பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து (பிஎச்யு) இன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.