மதுக்கரை: நாட்டிலேயே முதல்முறையாக தண்டவாளங்களை கடக்கும் யானைகளின் உயிரை காப்பாற்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் தமிழக வனத்துறை எடுத்த புதிய முயற்சி வெற்றி பெற்று உள்ளது. கோவையில் இருந்து மதுக்கரை வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு செல்வதற்கு ரயில் பாதை உள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதிக்குள் செல்லும் இந்த ரயில் பாதை உள்ள பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சில சமயம் யானைகள் ரயில் பாதையை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து வந்தன.
யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்காகவும், யானைகள் எளிதாக தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு வசதியாகவும் தண்டவாளத்தின் கீழே 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, எந்தப் பகுதியில் யானைகள் இருக்கின்றன என்பதை கண்டறிய அங்கு ரூ.7 கோடியில் அதிநவீன ஏஐ தொழில்நுட்ப வசதி கொண்ட 12 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் தண்டவாளம் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து உடனுக்குடன் ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் யானைகள் ரயிலில் அடிபடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
இந்த ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 2,500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளன. 12 டவர்களில் பொருத்தப்பட்ட 24 தெர்மல், ஆப்டிக்கல் கேமரா மூலம் 5,011 முறை அலெர்ட் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை வந்த தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, மதுக்கரை வனப்பகுதிக்கு உட்பட்ட மாவுத்தம்பதி பகுதியில், ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் தெர்மல் கேமராக்கள், அவை படம் பிடித்து அனுப்பும் பகுதி, கட்டுப்பாட்டு அறை, யானைகள் தண்டவாளத்தை எளிதாக கடந்து செல்ல அமைக்கப்பட்டு உள்ள பாதை வசதி உள்பட அனைத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாடிவயல் சென்ற அவர் அங்கு யானைகள் முகாமுக்கு அமைக்கப்பட்டு உள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுக்கரை அருகே யானைகள் தண்டவாளத்தை கடக்க அமைக்கப்பட்டு உள்ள வசதியால், கடந்த ஒரு ஆண்டில் எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. 2,500 முறை யானைகள் தங்கள் குட்டிகளுடன் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து உள்ளன. இங்கு அமைக்கப்பட்டு உள்ள ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தெர்மல் கேமராக்கள், தண்டவாளம் அருகே உள்ள காட்டு யானைகளை துல்லியமாக படம் எடுத்து அனுப்புகிறது. அதை கண்காணித்ததும், உடனடியாக இந்த பகுதி வழியாக வரும் ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்படுவதால், அவர்கள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்ததும், ஹாரன் அடித்தபடி ரயிலை மெதுவாக இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. அத்துடன் தண்டவாளத்தை கடக்க அமைக்கப்பட்டு உள்ள 2 சுரங்கப்பாதையையும் யானைகள் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post நாட்டிலேயே முதல்முறையாக செயல்படுத்திய திட்டம் வெற்றி: யானைகளின் உயிரை காப்பாற்றிய ‘ஏஐ’; தமிழக வனத்துறையின் அசத்தல் ப்ளான் appeared first on Dinakaran.