2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதம்தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டியிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்கலாம்.