மாஸ்கோ: நாளை லண்டனில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர புடின் விருப்பம் தெரிவித்துள்ளதால், இரு தரப்பிலும் புதிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
கடைசியாக அவர் அளித்த பேட்டியில், ‘இரு நாடுகளும் அடுத்த சில நாட்களுக்குள் அமைதி பேச்சுவார்த்தை பேசுவதற்கு உடன்படவில்லை என்றால், நாங்கள் (அமெரிக்கா) அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிவிடுவோம். இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் புடின் விதித்துள்ள நிபந்தனைகளில், ‘நேட்டோ உறுப்பினர் திட்டத்தை உக்ரைன் கைவிடுதல் வேண்டும்; ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நான்கு உக்ரைன் பகுதிகளை அங்கீகரிக்க வேண்டும்; உக்ரைனின் ராணுவ திறனை கட்டுப்படுத்த வேண்டும்’ ஆகியவை அடங்கும். ஆனால் இந்தக் கோரிக்கைகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
மேலும் அவர், ‘ரஷ்யாவின் நிபந்தனைகள் அமைதியை தாமதப்படுத்துவதற்கான உத்திகள்; ரஷ்யா உண்மையில் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையே நாளை லண்டனில் நடைபெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், உக்ரைன் பிரதிநிதிகள், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் அதிகாரிகளுடன், நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அடைவதற்கான வழிகளை விவாதிக்க உள்ளனர். ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு 30 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் அறிவித்துள்ள நிலையில், ராய்ட்டர்ஸ் மற்றும் இன்டர்ஃபாக்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியில், ரஷ்ய அதிபர் புதின், இரு தரப்பு அமைதி முயற்சிக்கு தயாராக உள்ளதாகவும், உக்ரைனிடமிருந்தும் இதேபோன்ற பதிலை எதிர்ப்பார்த்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்படலாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலின்படி, ரஷ்ய அதிபர் புடின் முதல் முறையாக அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், 30 மணி நேர ஈஸ்டர் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, நீண்டகால போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே நாளை லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழல்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
The post நாளை லண்டனில் பேச்சுவார்த்தை; உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர புடின் விருப்பம்: அமைதி முயற்சிக்கு முதன் முறையாக ஆதரவு appeared first on Dinakaran.