சென்னை: ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைவர் மருதூர் ஏ.ராமலிங்கம், இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், செ.புஷ்பராஜ், திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணைச் செயலாளர்கள் பா.துரைசாமி, கொடநாடு மு.பொன்தோஸ், சி.தசரதன், சா.ராஜேந்திரன், கொ.ரமேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்பி ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 2025-26 ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டிற்கு தொடர் துரோகம், மதவாத, கலக அரசியலை நடத்தி வருவதுடன், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்த பாஜ ஒன்றிய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழ்நாடு ஏற்க மறுப்பதை சுட்டிக்காட்டி” தமிழ்நாட்டுக்கு நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஏற்று கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும், மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை” என கூறிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் ஒன்றிய மோடி அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
மார்ச் 1ல், 72வது பிறந்தநாள் காணும் ‘திராவிட மாடல்’ நாயகர், முதல்வர், திமுக தலைவரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வார்டுகளில் திமுக இருவண்ண கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும், மேலும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிடும் வகையில் தெருமுனை கூட்டங்கள் நடத்தி, தலைவரின் பிறந்த நாளினை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக மருதூர் ஏ.ராமலிங்கம் மற்றும் துணைச் செயலாளராக கொ.ரமேஷ் ஆகியோரை புதியதாக நியமனம் செய்த முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
The post நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி: ஒன்றிய பாஜ அரசுக்கு ஆதிதிராவிடர் நலக்குழு கண்டன தீர்மானம் appeared first on Dinakaran.