டெல்லி: நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் கடந்த ஆண்டு 2024 ஜூலை 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில் 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று (24ம் தேதி) டெல்லியில் பாரத் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ஸ்ரீசுமன் பெர்ரி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய ஒன்றிய அமைச்சர்களும், அதேப்போன்று தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு தரப்பில் இருந்து மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய நிதி ஆயோக்கின் 10வது கூட்டம் மதியம் 1 மணி வரையில் ஒரு பகுதியாகவும், அதேபோன்று பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை என்று இரண்டு கட்டமாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதல்வர்களையும் பேச அனுமதிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஒன்றிய அரசு தமிழகத்துக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதையடுத்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது; “டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது.
“நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன். தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன். சென்னை 2ம் கட்ட கட்ட மெட்ரோ திட்டம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தினேன்.
நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன். இலங்கை சிறைபிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தினேன். கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா? இல்லையா? என்பதை பார்க்கலாம்” என பேட்டியளித்தார்.
The post நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.