நத்தம்: நத்தம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு கலை கல்லூரி அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நத்தம் பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதவிர சட்டமன்ற தேர்தலின் போது இப்பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொழுது திமுக வெற்றி பெறும்பட்சத்தில் அரசு கலை கல்லூரி கொண்டு வரப்படும் என வாக்குறுதி வழங்கினார். மேலும் கல்லூரி அமைவதற்காக நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தனது சொந்த இடத்தினை வழங்கியுள்ளது குறித்தும், விரைவில் கல்லூரி அமைய நடவடிக்கை எடுப்பதாகவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் மக்கள் மத்தியில் வாக்குறுதியை மீண்டும் மீண்டும் கூறி வந்து அதற்கான முழுமுயற்சியும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரலையில் 2025- 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நத்தம் பகுதி அரசு கலை கல்லூரி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் சர்புதீன் கூறுகையில், ‘நத்தம் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்னும் அதிகளவில் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கூடியுள்ளது’ என்றார். விவசாயி கண்ணன்: நத்தம் பகுதியானது தொழில் துறையில் பின் தங்கிய பகுதியாகும். இதனால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்துள்ளதால் பொருளாதார தற்சார்பு குறைவாகவே உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நத்தம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு கலை கல்லூரி இப்பகுதியில் அமைய உள்ளது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் மக்களுக்கான முதல்வர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். மேலும் இது கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி தடையின்றி தொடர வழிவகுக்கும். டெய்லர் ஆறுமுகம்: என் போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இந்த அறிவிப்பு செய்தியானது எங்களது குழந்தைகள் கல்லூரி கல்வியை இலகுவாக பெற வழிசெய்கிறது. முதல்வருக்கும், அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆசிரியர் குருபிரசாத்: நத்தம் பகுதி கிராமப்புறம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அரசு கலை கல்லூரி அமைப்பதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதில் கல்வி பயில வகை செய்யும்.
The post நீண்ட நோள் கோரிக்கை நிறைவேற்றம்; நத்தத்தில் அமைகிறது அரசு கலை கல்லூரி: பட்ஜெட்டில் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.