உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதில் வரும் 13-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோரின் சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.
சொத்து விவரங்களை வெளியிட்டுள்ள நீதிபதிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரும் உள்ளனர். சொத்து விவரங்கள் வெளியிட்டுள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக ரூ.120 கோடி வரை தனக்கு சொத்து இருப்பதாகவும், ரூ.91 கோடி வரை கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் வெளியிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.