தென் மாவட்டங்களில் மேற்கொள்ளும் அரசியல் சுற்றுப்பயணத்துக்காக தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளேன். இங்குள்ள பென்னிங்டன் நூலகத்தில் இருந்து இதைப் பதிவிடுகிறேன். இந்த நூலகம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு தேவையான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இங்கு உள்ளன. ரசிகமணி டி.கே.சி, ஜஸ்டிஸ் மகாராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்ற ஏராளமான ஆளுமைகள் இங்கு வந்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தவர் வத்ராயிருப்பு கே.எஸ்.கிருஷ்ணன். அவருக்கும் இந்த நூலகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் வீற்றிருக்கும் ஆண்டாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்த நூலகம். இங்கு கூட்ட அரங்கம் ஒன்றும் உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பென்னிங்டன் நூலகத்தைப் பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வளவு ஏன்… இப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களுக்கே இந்த நூலகத்தின் அருமை பெருமை சரிவரத் தெரிவதில்லை. அந்த அளவுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை உள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படிக்கும்போது, அங்குள்ள பேராசிரியர் ஒருவர், பென்னிங்டன் நூலகத்தைப் பற்றி என்னிடம் கேட்டார். வடபுலத்தில் இருக்கின்றவர்களுக்கு இந்த நூலகத்தின் சிறப்பு தெரிந்திருக்கிறது. ஆனால் இங்குள்ளவர்களுக்கு…? என்னவென்று சொல்வது!