சென்னை: தமிழகத்தில் பசுமை மின்சாரத்தை சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்டமைப்பை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பசுமை மின்சார பயன்பாட்டை அதிகரிக்குமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைக்கும் வகையில் சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இந்த மின்நிலையங்களை அமைத்து வருகின்றன. தற்போது பசுமை மின்சாரம் உற்பத்தியான உடனேயே பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழகத்தில் ஒருமணி நேரத்துக்கு ஆயிரம் மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்தும் ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்’ கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.