“சமூக நீதிக்கான ஒரே கட்சி திமுக தான் என்பது போல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில், சமூக நீதி குறித்துப் பேச திமுக-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இதற்கு, திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை, திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழச் செய்த சம்பவமே சான்று” – மதுரை பிரச்சார பயணத்தில் இப்படியொரு விமர்சனத்தை முன்வைத்தார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. அத்தோடு அதிமுக-வினர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டு அடுத்த டாபிக் தேடி போய் விட்டாலும் திண்டிவனம் நகராட்சியில் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை.
திண்டிவனம் நகராட்சி இப்போது திமுக வசம் இருக்கிறது. தலைவராக நிர்மலா ரவிச்சந்திரன் இருக்கிறார். துணைத் தலைவராக விசிக-வை சேர்ந்த ராஜலட்சுமி வெற்றிவேல் இருக்கிறார். இவரை வேட்பாளராக அறிவித்த போதே சர்ச்சை வெடித்தது. அதையெல்லாம் கடந்து துணைத் தலைவர் இருக்கையைப் பிடித்த ராஜலட்சுமிக்கு தலைவருக்கு அருகில் இருக்கை போடவில்லை என அடுத்த சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக ராஜலட்சுமி ஆட்சியர் வரைக்கும் புகார் அளித்த போதும் அண்மையில் தான் அவருக்கான இருக்கை உறுதியானது.
இந்த நிலையில் தான், இங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் பட்டியலினத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை திமுக கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழவைத்ததாக சர்ச்சை வெடித்து அது இபிஎஸ் எடுத்துப் பேசுமளவுக்கு விவகாரமாகிப் போனது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் முனியப்பன் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து அழுவது போல் காட்சிகள் வருகின்றன. அலுவலகத்தின் கோப்பு ஒன்றை தேடும் விஷயத்தில் முனியப்பனுக்கும் கவுன்சிலர் ரம்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் உச்சமாகத்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்கிறது முனியப்பன் தரப்பு.
இது தொடர்பாக கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் மரூர் ராஜா, நகர்மன்றத் தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக-வினர் 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ். அதேசமயம், காலில் விழுவது போல் நடித்து, வலது கையால் தனது கால்களை பிடித்துக் கொண்டு, இடது கையால் தனது உடலை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கவுன்சிலர் ரம்யா கொடுத்த புகாருக்கும் வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் காட்டாமல் காலத்தைக் கடத்துகிறார்கள்.